பாகிஸ்தான் நடிகை ஒருவர் இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்தது மட்டுமில்லாமல், இந்தியாவின் வெற்றியை பாகிஸ்தான் நெருங்குவது எளிதல்ல என்று விளாசியுள்ளார்..

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. இதையடுத்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலம் இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 23ஆம் தேதி மாலை சரியாக 5:44 மணிக்கு விண்கலத்தை தரையிறக்கத் தொடங்கிய இஸ்ரோ, பல சோதனைகள் மற்றும் சவால்களைச் சந்தித்து, விக்ரம் லேண்டரை மாலை 6:04 மணிக்கு நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கியது.

நிலவின் தென் துருவத்தை இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத வகையில் இந்தியா இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. பிரக்யான் ரோவர் தற்போது விக்ரம் லேண்டரில் இருந்து புறப்பட்டு நிலவை ஆராயத் தொடங்கியுள்ளது. இதற்கு பல்வேறு உலக தலைவர்கள், விண்வெளி துறை நிறுவனங்கள், மக்கள், பிரபலங்கள் என இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சந்திரயான் 3 திட்டத்திற்கு பாகிஸ்தானை சேர்ந்த நடிகை சேகர் ஷின்வாரி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, விண்வெளித் துறையில் பின்தங்கிய பாகிஸ்தான் குறித்தும் விளாசி பேசினார். அவர் தனது ட்விட்டர் எக்ஸ் பதிவில், ‘இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். இந்தியாவுடனான மோதலுக்கு அப்பால் இந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்ரோவை நான் உண்மையிலேயே வாழ்த்துகிறேன். ஏனென்றால், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லா வகையிலும் இடைவெளி அதிகரித்து விட்டது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை நிலவில் இறங்குவதற்கு 2 முதல் 3 தசாப்தங்கள் (20 முதல் 30 ஆண்டுகள்) ஆகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நமது தற்போதைய பிரச்சினைகளுக்கு நாமே பொறுப்பு.

மேலும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘இந்தியா இன்று என்ன அடைந்துள்ளது என்று எண்ணினால், வெட்கித் தலைகுனிய வேண்டும். ஏனெனில் நாட்டிற்குள் உள்ள சட்ட மற்றும் அரசியல் ஆதிக்கப் பிரச்சினைகளை சரி செய்ய முயற்சிக்கிறோம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வேறுபாடு, இந்தியாவின் வெற்றியை பாகிஸ்தான் நெருங்குவது எளிதல்ல என்பதை நிரூபிக்கிறது.”என தெரிவித்துள்ளார்.