தமிழ்நாடு சட்டப்பேரவையில் 3-வது நாள் கூட்டத்தொடரின் போது பேசிய பழனி சட்டமன்ற தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்குமார் கூறியதாவது, கொடைக்கானல், கீழ்மலை, மேல்மலை பகுதிகளில் பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ளது. இதனால் பெண்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் ஆண்களுக்கு அந்த வசதி குறைவாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் பிளஸ் டூ முடித்தவுடன் திண்டுக்கல்லுக்கு 94 கிலோ மீட்டர் தூரத்திற்கும், பழனிக்கு 65 கிலோ மீட்டர் தூரத்திற்கும், மதுரைக்கு 115 கிலோ மீட்டர் தூரத்திற்கும் செல்ல வேண்டி உள்ளது.

ஆனால் மழைக்காலங்களில் இரண்டு நாட்கள் வரை போக்குவரத்து தடைபடும் சூழல் நிலவுவதால் மலைப்பகுதியில் வசித்து வரும் மாணவர்கள் உயர் கல்வி கற்கும் விதமாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது, திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தமட்டில் ஆறு அரசு கலைக் கல்லூரிகள் அமைந்துள்ளது. பழனி தொகுதியை பொருத்தமட்டில் அன்னை தெரசா மகளிர் கலை கல்லூரி அமைந்துள்ளது. இங்கு 660 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அதில் 437 இடங்கள் காலியாக இருக்கிறது. அதேபோல் பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் இருபாலர் கல்லூரியிலும் காலியிடங்கள் இருக்கிறது. கொடைக்கானல் மாணவர்கள் பழனிக்கு வந்து மேற்படிப்பை படிக்கலாம். ஆனால் எம்எல்ஏ அவர்கள் கொடைக்கானல் பகுதியில் அரசு கல்லூரி வேண்டுமென கேட்கின்றார். இது நியாயமான கோரிக்கை தான். மற்ற மாவட்டங்களில் விட அங்கு அதிக கல்லூரிகள் இருக்கின்ற காரணத்தினால் புதிதாக கல்லூரி கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டு கல்லூரிகள் புதிதாக திறக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் அவர் பொறுப்பேற்ற 20 மாதங்களில் 31 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்படி ஒன்றரை ஆண்டுகளில் 31 கல்லூரிகளை தொடங்கிய ஒரே அரசு நமது தி.மு.க அரசு தான் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் அப்பாவு இவ்வளவு தூரம் தொடங்கி வச்சிருக்கீங்க? எங்கள் ராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கு ஒன்று என கேட்டார். உடனே அவையில் இருந்த அனைவரும் சிரித்தனர். நீங்களும் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்.

முதல்வரிடம் கூறி இந்த பட்ஜெட்டில் அறிவிக்க முடியுமா என பார்க்கிறேன். அதே சமயம் உங்கள் தொகுதியிலும் தனியார் கல்லூரிகளை பல்கலைக்கழக கல்லூரிகளாக மாற்றி இருக்கிறோம் என பொன்முடி தெரிவித்துள்ளார். உடனடியாக ஒன்றே ஒன்று ராதாபுரத்திற்கு என அப்பாவும் சிரித்தவாறு கேட்டு முடித்துக் கொண்டார். எந்த ஒரு பகுதியில் அரசு கல்லூரிகள் இல்லையோ அந்த பகுதிக்கு எல்லாம் வருங்காலங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். நிதிநிலைக்கு தகுந்தார் போல் அடுத்தடுத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.