விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா திமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி (இ.பி.எஸ்) கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் தற்போதைய திமுக தலைமையிலான கூட்டணியின் செயல்பாடுகள் மக்களிடையே நம்பிக்கையை இழக்கச்செய்துள்ளன என அவர் குற்றம்சாட்டினார்.
“விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாநாடு நடத்த அனுமதி தர மறுக்கப்படுகிறது. திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கே மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களது கொடியேற்றத்துக்கே தடையேற்படுத்தப்படுகிறது. இப்படி எவ்வளவு அசிங்கப்பட்ட நிலைமையில் அந்த கூட்டணியில் இருக்கணுமா? இதை பார்ப்பதற்கே வெட்கமாக இருக்கிறது,” என்றார் EPS.
அதிமுகவை பற்றிப் பேச திமுகவுக்கு உரிமையே இல்லையென்று அவர் எச்சரிக்கையோடு கூறினார். “எங்கள் கூட்டணியில் வருகிறவர்களை ரத்தின கம்பளத்தில் வரவேற்கும் பண்பும் பறந்த மனப்பான்மையும் கொண்டது அதிமுக. எங்களது கூட்டணி சூழ்நிலை மற்றும் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அமைக்கப்படும். இப்போது எல்லா கட்சிகளும் கூட்டணியோடுதான் போட்டியிடுகிறார்கள். திமுக முன்னாடி பாஜகவோட கூட இருந்ததே? அதே கூட்டணிப் பங்காளிகளையே இப்போது எங்களுடன் விமர்சிக்கிறார்கள்,” என்றார்.
EPS மேலும் கூறியதாவது: “சிறுபான்மை மக்களுக்கு நாங்கள்தான் உண்மையான பாதுகாவலர்கள். நாங்கள் ஆட்சி செய்த 30 ஆண்டுகளில் எங்கேயும் அவர்கள் பாதிக்கப்படவில்லை. அரண்போன், பெரம்பலூர் போன்ற பகுதிகளில் அவர்கள் சந்தித்த பிரச்னைகளுக்கு எங்கள் ஆட்சி தீர்வு கொடுத்தது. திமுக சொல்வது போல தங்களைப் பாதுகாப்பவர்கள் என்பதை மக்கள் நம்பவில்லை. உண்மை பேசத் தயார் என்றால் ஆதாரத்துடன் பேசி காட்டுங்கள்.”
“அதிமுக ஒரு சமூகநீதி சார்ந்த கட்சி. ஜாதி, மதம் பார்க்காமல் – ஒரே ஜாதி ஆண் ஜாதி, பெண் ஜாதி – என்பதை நம்பிக்கையாக கடைபிடிக்கிற கட்சி. எங்கள் தலைவர் ஜெயலலிதா உருவாக்கிய வழியில் இன்று அதிமுக நடக்கிறது. மக்கள் நலனே எங்களது அடிப்படை நோக்கம்,” என்றார்.
