அசாமிலுள்ள ஒரு சிறிய அரசு பள்ளியில் எடுக்கப்பட்ட ஒரு மனதைத் தொடும் காட்சி சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி, ஆயிரக்கணக்கான நெட்டிசன்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. வகுப்பு தொடங்குவதற்கு முன்பு தனது மாணவர்களின் தலைமுடியை மெதுவாகச் சீவி ஒழுங்குபடுத்தும் ஒரு பெண் ஆசிரியையின் செயல், எளிமையானதாயிருந்தாலும், அன்பும் அக்கறையும் நிரம்பியதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். சீரற்ற தலைமுடி,  பழுதடைந்த உடை போன்ற நிலையிலேயே அவர்கள் பள்ளி வருவதை அவ்வாசிரியை கவனித்து வருகிறார். பெற்றோரால் தகுந்த பராமரிப்பு வழங்க முடியாத சூழ்நிலையை உணர்ந்த அவர், தினமும் காலை மாணவர்களின் முகத்தை துடைத்துத் தருவது, தலைமுடியை சீவுவது, ஒழுங்குபடுத்துவது போன்ற செயல்களை தனது கடமையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Assam Official (@assamofficial.exe)

தன்னிச்சையாகத் தொடங்கிய இந்தச் செயல் இப்போது பள்ளியின் தினசரி நடைமுறையாகி விட்டது. “இந்தச் சிறிய நடவடிக்கைகள் குழந்தைகளின் நம்பிக்கையை உயர்த்தும்,” என்று அவர் நெருங்கியவர்களிடம் கூறிவருவதாக பள்ளி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். படிப்பிற்குப் பிறகும் மாணவர்களின் சுயமரியாதையை வளர்த்து அவர்களுக்கு அக்கறையுடன் அணுகுவது தான் உண்மையான கல்வி என்று அவர் நம்புகிறாள் என்பதும் கூறப்படுகிறது.

இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின்னர் பலரும் உணர்ச்சிவசப்பட்டனர். ஒரு பயனர், “இவள் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல, தாய்,” என்று பாராட்டினார். மற்றொருவர், “வட இந்தியாவில் சாதி காரணமாக மாணவர்களை துன்புறுத்தும் சில ஆசிரியர்கள் இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டார். மேலும் ஒருவர், “உண்மையான மனிதநேயம் இதுதான்,” என்று கருத்து பதிவிட்டார்.

கல்வி என்பது பாடநூல் அறிவை மட்டும் தருவதல்ல; அக்கறை, உற்சாகம், மனிதநேயம் ஆகியவற்றையும் குழந்தைகளுக்குள் விதைப்பதே உண்மையான ஆசிரியரின் பணியாகும் என்பதை இந்தச் சம்பவம் நினைவூட்டுகிறது. மேலும் ஒரு சீப்பு, கொஞ்சம் தண்ணீர், அதைவிட அதிகமான அன்பு—இவை ஒருவரின் நாளை மாற்றுபவையே அல்ல, அவர்களின் எதிர்காலத்தையும் மாற்றக் கூடியவையே என்பதை அந்த ஆசிரியை மீண்டும் நிரூபித்துள்ளார்.