சமூக வலைதளங்களில் பாம்புகளை வைத்து வித்தை காட்டும் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ பார்ப்பவர்களைப் பதற வைத்துள்ளது. இரண்டு நபர்கள் பைக்கில் வேகமாகச் சென்றுகொண்டிருக்க, பின்னால் அமர்ந்திருப்பவர் கையில் பல அடி நீளம் கொண்ட ஒரு பெரிய பாம்பைப் பிடித்துள்ளார். அந்தப் பாம்பின் வால் பகுதியை மட்டும் பிடித்துக்கொண்டு அவர் சாதாரணமாக அமர்ந்திருக்க, பாம்பின் தலைப்பகுதி சாலையோரம் உராய்ந்து விடுமோ என்கிற நிலையில் அந்தப் பயணம் தொடர்கிறது.
இந்த விசித்திரமான காட்சியைக் கண்ட பின்னால் வந்த கார் பயணி ஒருவர், அதிர்ச்சியில் தனது செல்போனில் அதைப் படம்பிடித்துள்ளார். கார் அந்த பைக்கிற்கு அருகில் சென்றதும், “என்ன செய்கிறீர்கள்?” என அந்தப் பெண் கேட்க, பைக்கை ஓட்டி வந்தவர் ஓரமாக நிறுத்துகிறார். உடனே கையில் பாம்பை வைத்திருந்த நபர், அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் சென்று அந்தப் பாம்பைப் பாதுகாப்பாகப் புதருக்குள் விடுகிறார். அப்போது அந்தப் பாம்பு அவரைத் தீண்ட முயன்றாலும், அவர் சாதுர்யமாக விலகி பாம்பைக் காப்பற்றிய வீடியோ தற்போது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்று இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
