டெல்லியில் கஞ்சவாலா நகரில் சுல்தான்புரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் தோழி உடன் சென்ற அஞ்சலி சிங் (20) என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று தன் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனம் சார்பிலான பணிகளை முடித்து கொடுத்து விட்டு பிறகு வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது அவர் மீது அதிகாலை கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்று உள்ளது. இது தொடர்பாக அதிகாலை 1:30 மணியளவிலான சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டனர்.

இதையடுத்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறியதாவது, அதிகாலை 2:22 மணியளவில் பெண் ஒருவர் காரில் சிக்கி உள்ளார் என காவல்துறையினருக்கு தகவல் சென்றுள்ளது. எனினும் 4.15 மணிக்கு நிர்வாண நிலையிலான உடல் கிடக்கிறது என்ற தகவல் கிடைத்த பிறகே காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். 13 கிலோ மீட்டர் தொலைவிலான அனைத்து சிசிடிவி காட்சிகள் பதிவையும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொள்ளவில்லை. இவ்விவகாரத்தில் காவல்துறையினரின் நடவடிக்கையில் திருப்தி இல்லை என்று குற்றம் சாட்டினார்.

அதன்பின் இந்த சம்பவம் குறித்து காரில் இருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில் காரின் அடியில் அஞ்சலி சிக்கியது தங்களுக்கு தெரியாது எனவும் காரில் அதிக சத்தத்துடன் இசை ஒலித்து கொண்டிருந்தது. இதனால் தங்களுக்கு எதுவுமே தெரியாதென காரில் இருந்த நபர்கள் கூறினர். எனினும் காவல்துறையினர் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில், அஞ்சலி காரில் சிக்கியது மோதல் நடைபெற்ற உடனே தெரியும் என குற்றவாளிகள் தரப்பில் வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.