பொதுவாகவே சமைக்கும் போது சில உணவுகளில் நம்மை அறியாமலேயே செய்யும் தவறுகளால் அந்த உணவு பாழாகிவிடும். ஆனால் சமைப்பதற்கு முன்பே சிலவற்றைப் பின்பற்றினால் நாம் சமைக்கும் உணவு சுவையாக இருக்கும். அதன்படி இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சமையல் குறிப்புகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சர்க்கரை பொங்கல் செய்யும் போது அதில் அரை கப் தேங்காய் பால் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

எந்த ஒரு இனிப்பு செய்தாலும் அதில் சிறிதளவு உப்பு சேர்த்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.

ரசத்திற்கு தாளிக்கும் போது சிறிது நெய்யுடன் கடுகு, ஐந்து முழு மிளகையும் சேர்த்து தாளித்தால் ரசம் மணமாக இருக்கும்.

தேங்காய் துருவல் மீதமாகிவிட்டால் அதனை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் அதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

தோசை மாவில் சிறிது சீரகத்தை கைகளால் தேய்த்து போட்டால் மணமாக இருக்கும்.

உளுந்து வடை செய்யும் மாவில் சிறிது உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து போட்டால் எண்ணெய் குடிக்காமல் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.

வடைக்கு மாவு அரைக்கும் போது நீர் அதிகமாகி விட்டால் ஒரு ஸ்பூன் நெய்யை அதில் விட்டால் மாவு இறுகிவிடும்.

ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுப்பாக இருக்கும்.

மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியை தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்க வேண்டும்.

எலுமிச்சை சாதம் செய்வதற்கு முன்பு வடித்த சாதத்தை பெரிய பாத்திரத்தில் போட்டு நல்லெண்ணையை ஊற்றி கிளறி ஆற வைத்த பிறகு செய்தால் சாதம் உதிரி உதிரியாக இருக்கும்.

வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது புளித்த மோரை சேர்த்தால் வெண்டைக்காய் மொறு மொறுப்பாக இருக்கும்.

காய்களை வேக வைக்கும் போது அதிக தண்ணீர் சேர்த்து வேக வைத்தால் அதில் இருக்கும் வைட்டமின் சத்துக்கள் போய்விடும்.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக மாறிவிடும்.

குளிக்கும்போது தயிரை உடலில் தேய்த்து குளித்தால் வேர்க்குரு மறைந்து விடும்.

கிராம்பை தண்ணீரில் உரசி முகப்பரு உள்ள இடத்தில் தடவினால் பரு அப்படியே மறைந்து விடும்.