இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய இருமல் மருந்துகளின் தரமானது சா்வதேச அளவில் சா்ச்சையான சூழலில், பிற நாடுகளுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கு முன் அரசு ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துவது பற்றி மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.

மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையமான மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பு(சிடிஎஸ்சிஓ) இதற்கான பரிந்துரையை செய்து இருப்பதாகவும் அவா்கள் தெரிவித்தனா். இந்த பரிந்துரையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சான்றிதழை சமா்ப்பித்த பிறகே, மருந்து தொகுப்பை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலை வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம்(டிஜிஎஃப்டி) வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.