அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது – இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய சவாலாக அமைந்திருக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும்.

மாணவர்கள் மற்றும் இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்தைக்கேள்விக்குறியாக்கும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை வேரறுக்க முடியாத அளவிற்கு கொண்டு சென்ற தமிழக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து மன்னார் வளைகுடா வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 108 கோடி ரூபாய் மதிப்பிலான 99 கிலோ எடையுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மதுரை இரயில் நிலையம், சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் 108 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களுக்கும் சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வரும் போதைப் பொருட்கள் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு, அதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருப்பினும், அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.