கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை ஆய்வு செய்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இன்று இரவு பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்த பிறகு நாளை தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்..

டெல்லியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர், தென் மாவட்டங்களில் வானிலை மையம் கணித்ததை விட மழைப்பொழிவும் மிக அதிகமாக பல மடங்கு இருந்தது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை சற்று தாமதமாகவே கிடைத்தது. தமிழக அரசின் நடவடிக்கைகளால் தான் பாதிப்பு பெரிய அளவில் குறைந்தது. நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மிக்ஜாம் புயல், தென் மாவட்ட மழை என அடுத்தடுத்து இரு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்துள்ளது.

புயலுக்கு நிவாரணமாக ரூபாய் 5,160 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். கடுமையான மழை பொழிவினால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இன்று இரவு 10:30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளேன். இன்று இரவு பிரதமரை சந்தித்த பின்னர் தூத்துக்குடி சென்று வெள்ள பாதிப்புகளை பார்வையிட உள்ளேன் என்று தெரிவித்தார்..