
ஹைதராபாத்திலுள்ள ஒரு ஷாப்பிங் மாளிகை திறப்பு விழாவிற்கு பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் வந்திருந்தார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் தாக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் இருப்பதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மசாப் டாங்க் பகுதியில், பஞ்சாரா ஹில்ஸ் பக்கத்திலுள்ள ஹோட்டலில் இந்த சம்பவம் கடந்த இரவு 11 மணியளவில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அடையாளம் தெரியாத நான்கு பேர் நடிகையின் அறைக்குள் கட்டாயமாக நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நடிகையின் அளித்த புகாரின்படி, இரு பெண்கள் மற்றும் இரண்டு இளைஞர்கள் என்னுடைய அறையில் எனக்கு தெரியாமலே நுழைந்து, தவறான செயல்களில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், பின்னர் கையும், காலும் கட்டி வைத்து என்னுடைய பையில் இருந்த ரூ.50,000 பணம் மற்றும் தங்க நகைகளை திருடி தப்பியோடினார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. சம்பவத்துக்குப் பிறகு, நடிகை உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை அடையாளம் காண ஹோட்டல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகள் சோதனை செய்யப்படுகிறது.