தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த  தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததன் காரணமாக நேற்று நாகை துறைமுக அலுவலகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு மேல் பலத்த காற்று வீசியதால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் நாகையில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். காற்று மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். இதனால் முதற்கட்டமாக மீனவர்கள் இன்றும் நாளையும்  இரண்டு நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை உடனடியாக கரைத்திரும்பும்படி அறிவுறுத்தி உள்ளனர்.