அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்து கட்டியணைப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைத் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தீவிர இடதுசாரி பைத்தியங்களுக்கு இது பிடிக்காமல் போகலாம், ஆனால் இது பார்க்க நன்றாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் அமைந்துள்ளது.

ஏற்கனவே தன்னை ஒரு புனிதராகச் சித்தரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளான சில நாட்களிலேயே டிரம்ப் மீண்டும் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார். ​டிரம்பின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள மதத் தலைவர்கள், இது மத நிந்தனை என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையே, போப் ஆண்டவர் லியோவின் வெளியுறவுக் கொள்கைகளை விமர்சித்த டிரம்ப், அவரை “பலவீனமானவர்” என்றும் சாடியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த போப் ஆண்டவர், தனது நிலைப்பாடு அரசியல் சார்ந்தது அல்ல, அது நற்செய்தி போதனைகளை அடிப்படையாகக் கொண்டது என்று அமைதி காத்துள்ளார். டிரம்ப் மற்றும் போப் ஆண்டவருக்கு இடையே வெடித்துள்ள இந்த மோதல் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் விவாதப் பொருளாகி ரீச் பெற்று வருகிறது.