இமயமலையில் அமைந்திருக்கும் உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் சென்ற 6ம் தேதி நில அதிர்வு காரணமாக வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் நகரம் மொத்தமும் நில அதிர்வால் பாதிக்கப்பட்டது. அங்கு இருந்த சுமார் 600 வீடுகளிலும் பெரிய விரிசல்கள் ஏற்பட்டது. மேலும் கோவில் ஒன்று இடிந்து விழுந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

மாநில நிபுணர்கள் குழு, நில அதிர்வுக்கான காரணம் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்பின் செயற்கைக்கோள் தரவுகளை வைத்து ஆய்வு நடத்தப்பட்டதில், மொத்த ஜோஷிமத் நகரமும் மண்ணுக்குள் புதைந்து வருவதாக தெரியவந்தது. ஜோஷிமத் நகரமும் அதன் சுற்றுவட்டார பகுதிகளும் வருடத்திற்கு இரண்டரை இன்ச் எனும் அளவுக்கு மண்ணுக்குள் புதைந்து வருவதாக நிபுணர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் ஜோஷிமத் சம்பவத்திற்கு “மொரைன் கோட்பாடு” காரணமாக இருக்கலாம் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் காரணமாக கேதர்நாத் மட்டுமின்றி உயரமான இமயமலை பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் பற்றி நாம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.