பொதுவாக மாமியார் மற்றும் மருமகள் என்றாலே கருத்து வேறுபாடுகளும், மோதல்களும் நிறைந்த உறவாகவே பார்க்கப்படும் சமூகத்தில், அதற்கு நேர்மாறாக அன்பின் உச்சத்தை வெளிப்படுத்தும் விதமாக கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா மாலூர் கிராமத்தைச் சேர்ந்த சாந்தாபாய் என்பவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தனது மருமகள் பாசம்மாவுக்குத் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்கி மறுவாழ்வு அளித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒன்பது மாதங்களாகக் கடுமையான சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த பாசம்மாவுக்கு, உறவினர்கள் யாரும் தானம் செய்ய முன்வராத சூழலில், மாமியார் சாந்தாபாய் தயக்கமின்றி முன்வந்து தனது மருமகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் “மருமகள் என்பவள் வெளியாள் அல்ல, அவளும் ஒரு மகள் தான்” என்பதைச் செயலில் நிரூபித்துள்ள சாந்தாபாயின் இந்தத் தியாகம், அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இச்செய்தி, உறவுகளுக்குள் இருக்க வேண்டிய புரிதலையும், மனிதநேயத்தையும் பறைசாற்றுவதோடு, உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தையும் உலகிற்கு உணர்த்தும் ஒரு உன்னத உதாரணமாகத் திகழ்கிறது.