அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தற்குறி என்று விமர்சனம் செய்திருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை தற்குறி என்று அண்ணாமலை விமர்சித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது.

அவர் அண்ணாமலை போன்று ஆளுங்கட்சியாக உள்ள கட்சிக்கு நேரடியாக தலைவராகவில்லை. அவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து படிப்படியாக கட்சியில் வளர்ந்து இந்த பதவியை அடைந்துள்ளார். அவர் தற்போது நடைபெறும் ஆட்சியை விட மிக சிறப்பான ஆட்சியை கொடுத்தவர். அவர் ஒன்றும் கார்பந்தயம் விட்டவர் கிடையாது. தைப்பூசத்தன்று விடுமுறை அளித்தவர் என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக சீமான் கருத்து தெரிவித்துள்ளதால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணிக்கு அடித்தளம் போடுகிறாரா என்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.