
சென்னை எழும்பூரில் அமமுக கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது, அதிமுக மீண்டும் இணைவதற்கான ஒளி வட்டம் பிரகாசமாக தெரிகிறது. கூட்டணி வாய்ப்பும் இருக்கிறது என்று கூறினார்.
அதன் பிறகு பேசிய டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை விட திமுக ஆட்சியை மிகவும் மோசமாக இருக்கிறது. அமித்ஷா சிறந்த அரசியல் தலைவராக இருக்கும் நிலையில் அவருடைய எக்ஸ் தள பதிவே அதிமுக கூட்டணிக்கான பதிலை தரும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்த நிலையில் வருகிற சட்டசபை தேர்தலில் மக்கள் அதற்கு பதிலடி கொடுப்பார்கள். மேலும் திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் அவர்களை வீழ்த்தலாம் என்று கூறினார்.
முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு அமித்ஷா தன்னுடைய x பக்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கும் என்று பதிவிட்டு இருந்தார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் கூட்டணியை உறுதிப்படுத்தவில்லை.
அவர் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் பாஜக உடனான கூட்டணி நிலைப்பாடு பற்றி அப்போது அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் இந்த சந்திப்பை வைத்து தான் ஒபிஎஸ் மீண்டும் அதிமுக இணையும் என்றும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்றும் கூறிய நிலையில் டிடிவி தினகரனும் அதிமுக பாஜக கூட்டணியில் இணையும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.