அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பிறகு தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என்று அமித்ஷா கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து உள்துறை மந்திரியை சந்தித்து முறையிடவே சென்றதாக கூறினார். அதன் பிறகு தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால் பாஜகவுடன் கூட்டணி நிலைப்பாடு பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறினார். ஆனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று இபிஎஸ் கூறவில்லை. இதன் காரணமாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை நேரில் சந்தித்தது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கும் நிலையில் தொல் திருமாவளவனும் இது பற்றி பேசியுள்ளார். அதாவது அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்திருப்பது தமிழ்நாடு அரசியல் களத்தில் மட்டுமில்லாமல் அகில இந்திய அளவில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

அதோடு தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருந்தாலும் தமிழ்நாட்டின் அரசியல் களம் தற்போதே  சூடுபிடிக்க தொடங்கிவிட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக முத்தரசன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி இருப்பதால்தான் அமித்ஷாவை சந்தித்தார் என்று கூறினார். அதோடு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் கல்யாண தேதியை முடிவு செய்து பின்னர் அறிவிப்பார்கள் என்றும் விமர்சித்தார்.