நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு பகுதியில் தொழிலதிபரான குமாரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் 75 லட்சம் ரூபாய்க்கு ஒரு காரை விலைக்கு வாங்கினார். கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஆண்டு பிரிமீயமாக 2 லட்சத்து 27 ஆயிரத்து 58 ரூபாய் செலுத்தி குமாரசாமி காப்பீடு செய்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் இருந்து குமாரசாமி ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது கனமழை பெய்ததால் கார் இன்ஜினில் தண்ணீர் சென்று பழுதாகிவிட்டது. அதனை சரி செய்ததற்கான செலவு தொகையை கேட்டு குமாரசாமி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதற்கு முந்தைய ஆண்டில் வேறு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காப்பீடு பெற்ற போது இழப்பீடு பெற்றதை தெரிவிக்காமல் தங்களிடம் காப்பீடு பெற்றுள்ளதாக கூறி அந்த செலவு தொகையை கொடுக்க இன்சூரன்ஸ் நிறுவனம் மறுத்தது.

இதுகுறித்து குமாரசாமி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வீ.ராமராஜ் காரை சரி செய்த செலவு தொகையிலிருந்து 20 சதவீதம் கழித்துக் கொண்டு மீதமுள்ள 23 லட்சத்து 74 ஆயிரத்து 792 ரூபாய் பணம், தற்போது வரை 9 சதவீத வட்டி 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய், குமாரசாமிக்கு இழப்பீடாக 5 லட்ச ரூபாய் என மொத்தம் 36 லட்சத்து 84 ஆயிரத்து 792 ரூபாய் பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.