மேற்காசியாவில் ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே தீவிரமடைந்து வரும் போரினால், பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. அந்நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பு இன்னும் 11 நாட்களுக்கு மட்டுமே உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் பெட்ரோலிய விவகாரங்களுக்கான செனட் நிலைக்குழுவிடம் பெட்ரோலியத் துறைச் செயலாளர் தாக்கல் செய்த அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி கச்சா எண்ணெய்: 11 நாட்கள் மட்டுமே இருப்பு உள்ளது. பெட்ரோல் 27 நாட்கள். டீசல்: 21 நாட்கள். எல்பிஜி (சமையல் எரிவாயு): வெறும் 9 நாட்கள் மட்டுமே. விமான எரிபொருள்: 14 நாட்கள் மட்டுமே இருப்பு உள்ளது.

பாகிஸ்தான் தனது பெட்ரோலியத் தேவையில் 70 சதவீதத்தை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது. தற்போது போர் காரணமாக ‘ஹோர்முஸ் நீர்சந்தி’  வழியாகச் சரக்குக் கப்பல்கள் வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு வரவேண்டிய எண்ணெய் டாங்கர்களை ஈரான் அனுமதிக்காததே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழலிலிருந்து தப்பிக்க, பாகிஸ்தான் தற்போது இந்தியாவின் ராஜதந்திர வழியைப் பின்பற்றத் தொடங்கியுள்ளது. இந்தியா ஏற்கனவே ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஹோர்முஸ் நீர்சந்தி வழியாகத் தனது எண்ணெய் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்துள்ளது. இதைப் பார்த்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோரும், நான்கு கச்சா எண்ணெய் கப்பல்களை விடுவிக்க ஈரானுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளனர்.

எரிவாயு (LNG) விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கலால், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குப் பிறகு பாகிஸ்தான் முழுவதும் கடும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மார்ச் மாதத்தில் வர வேண்டிய 8 எல்என்ஜி கப்பல்களில் 2 மட்டுமே இதுவரை பாகிஸ்தான் வந்து சேர்ந்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க சுமார் 3 கோடி மோட்டார் சைக்கிள் மற்றும் ரிக்ஷா உரிமையாளர்களுக்கு ₹2,300 கோடி மானியம் வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கான நிதி, அரசின் இதர செலவினங்களைக் குறைப்பதன் மூலம் திரட்டப்பட உள்ளது.