
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் புதிய மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கேத்தரின் வெட் கொண்டு வந்துள்ள இந்த மசோதா, இளையவர்களை தவறான உள்ளடக்கம், சமூக ஊடக அடிமைத்தனம் மற்றும் ஆன்லைன் கொடுமைகளிலிருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சமூக ஊடக நிறுவனங்கள் பயனர்களின் வயதை சரிபார்க்கும் பொறுப்பைத் தங்களே ஏற்க வேண்டும் எனவும், அந்த நிபந்தனையை மீறினால், பெரிய அபராதங்கள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சுக்கு நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளார். “இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல; இது நியூசிலாந்து குழந்தைகளின் பாதுகாப்பை சார்ந்த விஷயம்” என அவர் தெரிவித்துள்ளார். மசோதாவை அரசாங்கம் நேரடியாக ஆதரித்து கொண்டு வரும் நிலையில், அது விரைவாக சட்டமாகக்கூடும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இந்த மசோதா ஆஸ்திரேலியாவில் 2024ம் ஆண்டு நவம்பரில் நிறைவேற்றப்பட்ட உலகின் முதல் சமூக ஊடக வயது வரம்பு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் அமலாகியுள்ள அந்தச் சட்டத்தின் கீழ், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தங்கள் தளங்களில் பயன்படுத்த அனுமதிக்கும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு 50 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வரை அபராதம் விதிக்கப்படும். முக்கியமாக, வயது வரம்புகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு பெற்றோர்கள் அல்லது குழந்தைகள் அல்ல, சமூக ஊடக நிறுவனங்களுக்கே உரியது என சட்டம் தெளிவுபடுத்துகிறது.