நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், மே 10ஆம் தேதி(நாளை) முதல் UPI, ATM கார்டு மற்றும் பிற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் பணம் பெறுவதை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

இதற்கான முக்கிய காரணமாக, இணைய வழி மோசடிகள் அதிகரிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. மோசடிக்குழுக்கள் பிறரின் வங்கி விவரங்களை திருடி, அந்த தகவல்களைப் பயன்படுத்தி பெட்ரோல் வாங்குவதாக உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த மோசடி சம்பவங்களால் பெட்ரோல் பம்ப் உரிமையாளர்களுக்கு பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. உண்மையான வங்கிக் கணக்கு உரிமையாளர் பரிவர்த்தனை குறித்து போலீசில் புகார் அளிக்கும்போது, அந்த பரிவர்த்தனை ரத்தாகிறது.

இதனால், பெட்ரோல் வழங்கிய உரிமையாளருக்கு பணம் வராமல் போகிறது. மேலும், சில சமயங்களில் அவர்களது வங்கிக் கணக்குகளே முடக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலைமையால், விதர்பா மற்றும் அனைத்து மகாராஷ்டிரா பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கங்கள், ஒருங்கிணைந்த முடிவெடுத்து டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்க்க தீர்மானித்துள்ளன.

பொதுமக்கள் இதை உணர்ந்து, பெட்ரோல் பங்க்கிற்கு செல்லும் போது பணத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் தற்காலிகமாக சிரமம் ஏற்பட்டாலும், பாதுகாப்புக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.