தமிழகத்தில் பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ அல்லது திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பள்ளிகளில் எந்த குழந்தையையும் உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக துன்புறுத்தினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தவறு செய்யும் குழந்தைகளை அடிப்பதற்கு பதிலாக அவர்களுக்கு ஆசிரியர்கள் உதவி செய்ய முன்வர வேண்டும்.

குழந்தைகள் நல்ல முறையில் நடந்து கொள்ள அவர்களுக்கு வாழ்வியல் திறன் கல்வி அளிக்க வேண்டும். அவர்களை தண்டிப்பதற்கு பதில் அவர்கள் படிப்பதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும். குழந்தைகள் தங்களுடைய குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க பள்ளிகளில் கோரிக்கை பெட்டி வைக்க வேண்டும். ஆசிரியர்கள் குழந்தைகளின் பெற்றோர்களைப் போல நடந்து கொள்ள வேண்டும். கடுமையான வார்த்தைகளால் திட்டக்கூடாது. குழந்தைகளை எந்த வகையிலும் அடிக்க மாட்டோம் என்று ஆசிரியர்களிடம் பள்ளி நிர்வாகம் சார்பாக உறுதிமொழி பெறப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.