தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 467 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்டார். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த கூட்டத்தில் கம்பைநல்லூர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் உயிரிழந்த 3 பெண் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச கல்வி பெறுவதற்கான ஆணைகளையும், படிப்பதற்கு தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், கற்றல் உபகரணங்கள், உடைகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.