இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஓய்வுக்கு பிறகு ஒரு நிலையான வருமானம் வர வேண்டும் என்று விரும்புவார்கள். பண நெருக்கடி என்பது ஏழை, எளிய மக்களுக்கு அதிக கஷ்டத்தை கொடுக்கும் நிலையில் வயதானவர்களுக்கு இன்னும் அதிக கஷ்டத்தையே கொடுக்கும். இந்நிலையில் சீனியர் சிட்டிசன்களுக்கு பலன் தரும் சில திட்டங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி தபால் நிலையங்களில் உள்ள பிரபலமான சேமிப்பு திட்டமாக மூத்த குடிமக்கள் திட்டம் இருக்கிறது.

இந்த திட்டம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட சில முன்னணி வங்கிகளிலும் இருக்கிறது. இந்த திட்டத்தின் வட்டி விகிதம் 8 சதவீதமாக இருக்கும் நிலையில், 55 வயது முதல் 60 வயது வரை உள்ள ஒரு நபர் 5 வருட காலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை திறந்து கொள்ளலாம். இதனையடுத்து மூத்த குடிமக்களுக்கு அதிக சலுகைகள் தரும் பிக்சட் டெபாசிட் திட்டமானது போஸ்ட் ஆபீஸ் மற்றும் வங்கிகளில் உள்ள ஒரு பாதுகாப்பான சேமிப்பு திட்டம் ஆகும். இது பங்குச்சந்தையுடன் தொடர்பற்ற திட்டம் என்பதால் உங்களுடைய முதலீடு பாதுகாப்பானதாக இருக்கும். இந்தத் திட்டத்திற்கு வங்கிகள் நிறைய வட்டி தருவதால் மூத்த குடிமக்கள் அதிகளவில் பயன் அடைகிறார்கள்.

மேலும் தபால் நிலையங்களில் உள்ள மாத வருமான சேமிப்பு திட்டத்திலும் சீனியர் சிட்டிசன்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு 6.7 சதவீத வட்டி தற்போது கிடைக்கும் நிலையில், திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒன்று அல்லது கூட்டு கணக்குகளை கூட திறக்கலாம். இந்த திட்டத்தில் குறைந்த பட்சமாக ரூ. 1000 முதலீடு செய்யலாம். மேலும் அதிகபட்சமாக 4.5 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் உச்ச வரம்பாக 9 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம்.