இந்தியாவில் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி டெல்லியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில், பல்ஸ்வா பால் பண்ணை அருகே பதுங்கி இருந்த ஜெகஜீத் சிங், ஜக்கா நவுசத் ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது பயங்கரவாத அமைப்புகளுடன் குற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில் கழிவுநீர் ஓடையிலிருந்து 3 துண்டுகளாக வெட்டப்பட்ட அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நபர் யார் என்பதை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு குற்றவாளிகள் தங்கி இருந்த கட்டிடத்தை சோதனை செய்ததில் 2 கையெறி குண்டுகள், 3 கைதுப்பாக்கிகள், 22 வெடிக்க தயாராக உள்ள தோட்டாக்கள் போன்றவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளில் ஒருவரான ஜக்காவுக்கு கனடாவை சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவதாகவும், நவுசத்துக்கு ஹர்கத்-உல்-அன்சார் என்ற பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.