
இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. வங்கி கணக்கு தொடங்கி பல தேவைகளுக்கும் இன்று ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு என அனைத்திற்கும் ஆதார் அட்டை தேவைப்படும் விலையில் இந்தியாவில் சராசரியாக 120 கோடி மக்கள் ஆதார் அட்டை பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மத்திய அரசு ஆதார் அட்டையில் எழும் மோசடிகளை தவிர்க்க புதிய மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஆதார் அட்டையில் கைரேகை மற்றும் ஓடிபி ஆகியவற்றுக்கு பதிலாக முகத்தை நேரடியாக ஸ்கேன் செய்வது போன்ற புதிய முறைகளை அரசு விரைவில் கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் மக்களின் நேரம் மிச்சமாவது மட்டுமல்லாமல் கைரேகை பிரச்சனைகளும் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆதார் பயன்பாடுகளை எளிதாக்கவும் போலி ஆதார் கார்டுகளை கண்டறியவும் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கமளித்துள்ளது. தற்போது இந்த திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வரும் நிலையில் இந்த புதிய முறைகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.