அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசு புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படிப்பை முடித்த பிறகு அங்கு வேலை செய்யும் அனுமதியைப் பெற, மாணவர்கள் அல்லது நிறுவனங்கள் சுமார் 1 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 83 லட்சம் ரூபாய்) கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இந்தத் திட்டத்திற்கு வெள்ளை மாளிகையின் இறுதி ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.

அமெரிக்க அரசாங்கம் இந்த அதிரடிட்டுக் கட்டணத்தை ‘ஆப்ஷனல் பிராக்டிகல் டிரெய்னிங்’  திட்டத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமே சர்வதேச மாணவர்கள் தங்கள் மாணவர் விசா காலத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் 1 முதல் 3 ஆண்டுகள் வரை தங்கிப் பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த 2024 ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, சுமார் 4,19,000 வெளிநாட்டு மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்தால், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் உயர் கல்வி பயில்வதில் காட்டும் ஆர்வம் கடுமையாகக் குறையும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தக் கடுமையான நடவடிக்கை, சட்டப்பூர்வக் குடியேற்றத்தைக் குறைக்கும் டொனால்ட் டிரம்ப் கொள்கையின் ஒரு பகுதியாகும். இந்தத் முடிவால் வெளிநாட்டு மாணவர்களின் கட்டணங்களை நம்பியிருக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படலாம். மேலும், சிலிக்கான் மற்றும் வால் ஸ்ட்ரீட் போன்ற முக்கிய இடங்களிலுள்ள முன்னணித் தொழில்நுட்ப மற்றும் நிதி நிறுவனங்கள், திறமையான ஊழியர்களைத் தேர்வு செய்வதில் கடுமையான சவால்களைச் சந்திக்க நேரிடும்.

இதற்கு முன்பு எச்-1பி விசா மீதும் இதுபோன்ற ஒரு லட்சம் டாலர் கட்டணத்தை விதிக்க ட்ரம்ப் அரசு முயன்றது. ஆனால், கடந்த வாரம் பாஸ்டன் நீதிமன்றம் அதற்குத் தடை விதித்தது. இதன் காரணமாகவே தற்போது இந்த புதிய திட்டத்தின் மீது அரசு தனது கவனத்தைத் திருப்பியுள்ளதாகத் தெரிகிறது. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையில் +இதுகுறித்த ஆலோசனைகள் நடந்து வரும் நிலையில், இந்தத் தொகையை மாணவர்களே கட்ட வேண்டுமா அல்லது வேலை வழங்கும் நிறுவனங்கள் கட்ட வேண்டுமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.