சென்னை ரிப்பன் மாளிகையில் கடந்த வருடம் பருவமழையின் போது ஏற்பட்ட பாதிப்புகளை திறம்பட கையாண்ட அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியாற்றிய 586 பேரில் 44 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் முகேஷ் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் கூடுதல் தலைமை செயலாளர் சிவா தாஸ் மீனா, தலைமை செயலாளர் முனைவர் வே.இறையன்பு, மாநகராட்சி ஆணையர் சுகர் தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்க ஜீவால்  மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின் முதல்வர் ஸ்டாலின்  கூறியதாவது, தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களில் கொரோனா மற்றும் மழைவெள்ள பாதிப்புகளை திறப்பட கையாண்டு வெற்றி பெற்று வருகிறது. கடந்த ஆட்சியின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த மழையின் போது மழைநீர் தேங்கவில்லை என்ற நிலை உருவாக்குவதற்காக உறுதிமொழி எடுத்து செயல்படுத்தியுள்ளோம். இந்நிலையில் கடந்த முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒப்பிட்டு ஊடகங்களும் பாராட்டியது.

மழைக்காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சென்னை மாநகராட்சி சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் நீர்வளத்துறை நெடுஞ்சாலைத்துறை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் காவல் துறையை சேர்ந்த பணியாளர்கள் பணி பாராட்டுக்குரியதாகும். கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு இதற்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வே.திருப்புகழ் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அறிக்கையின்படி நிதி ஒதுக்கப்பட்டு பருவமழை தொடங்கும் முன்பாக மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. இனி வரும் காலங்களில் மழைநீர் தேக்கம் இல்லாமல் பருவ மழை காலங்களை சென்னை வாழ் மக்கள் நிச்சயம் பார்க்க இருக்கின்றனர். இதனை செயல்படுத்தி அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை மனதார பாராட்டுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.