
கேரளா மாநிலத்தில் கல்வி அமைப்பில் சிறப்பான மாற்றத்தை உருவாக்கியிருக்கிறது இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் இயக்கிய திரைப்படம் ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’. அரசு பள்ளி ஒன்றில் நடைபெறும் மாணவ சுயாட்சி தேர்தலையையும், மாணவர்கள் மத்தியில் நிலவும் இடையே வித்தியாசங்களை குறைக்கும் முயற்சிகளையும் கொண்டு படம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில், மாணவர்களை அரை வட்ட வடிவில் அமர வைத்து, ஆசிரியர் மையமாக இருந்து அனைவரையும் காணும் வகையில் வகுப்பறை அமைக்கப்பட்ட காட்சிகள், சமூக வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இது ஒரு தனிச்சிறப்பான திரை காட்சியாக மட்டுமல்லாமல், உண்மையான மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் 6 பள்ளிகளில் இதுவரை பெஞ்ச் அமைப்பை மாற்றி, இந்த அரை வட்ட முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. முதலில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள வலக்கம் ஆர்.வி.வி. மேல்நிலைப்பள்ளி இந்த மாற்றத்தை அமல்படுத்தியது.
இது போக்குவரத்துத் துறை அமைச்சர் கணேஷ்குமார் நிர்வகிக்கும் பள்ளியாகும். படத்தின் உள்ளடக்கம் அவருக்கு முன்கூட்டியே காண்பிக்கப்பட்டதாகவும், அவர் விரும்பியதையடுத்து, தனது பள்ளியில் இந்த மாற்றத்தை செய்துள்ளதாகவும் இயக்குநர் வினேஷ் விஸ்வநாத் கூறினார்.
1994ம் ஆண்டு மத்திய அரசு பரிந்துரைத்திருந்த இந்த வகுப்பறை மாற்றம், தற்போது ஒரு திரைப்படத்தின் தாக்கத்தில் செயல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல பள்ளிகள் இந்த மாற்றங்களை தங்களது வகுப்பறைகளிலும் மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
படம் திரையரங்குகளில் குறுகிய நாட்கள் மட்டுமே ஓடியிருந்தாலும், ஓ.டி.டி. வெளியீட்டுக்குப் பின்னர் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இது கலைத்துறையின் சமூக தாக்கத்தை விளக்கும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.