சமூக வலைத்தளமான எக்ஸ் (X) பக்கத்தில் வெளியாகி, தற்போது உலக அளவில் ஆயிரக்கணக்கான மக்களின் பாராட்டுகளையும் நெகிழ்ச்சியையும் பெற்று வரும் பதிவு ஒன்று இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்தப் பதிவின்படி, பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுவன் ஆட்டோ ஒன்றை நிறுத்தி, தன் தங்கையையும் அவளுடன் இன்னொரு சிறுமியையும் பள்ளிக்கு அழைத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றியுள்ளான். அவர்கள் பள்ளிக்குச் சென்று இறங்கியதும், ஆட்டோவிற்கான வாடகைப் பணத்தைக் கொடுப்பதற்காக அந்தச் சிறுவன் டிரைவரிடம் சென்றுள்ளான்.

​அப்போது அந்த ஆட்டோ டிரைவர், “தம்பி, இந்த இரண்டு சிறுமிகளும் உன்னுடைய சொந்தத் தங்கைகளா?” என்று அன்போடு கேட்டுள்ளார். அதற்கு அந்தச் சிறுவன், “இல்லைண்ணே, ஒருத்தி என் சொந்தத் தங்கை, இன்னொரு சிறுமி பள்ளிக்குச் செல்ல வழியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தேன், அவளுக்கும் உதவி தேவைப்பட்டதால் கூட்டி வந்தேன்” என்று எதார்த்தமாகக் கூறியுள்ளான்.

இந்தச் சிறிய வயதில் அந்தச் சிறுவனுக்கு இருக்கும் இவ்வளவு பெரிய நல்ல குணத்தையும், மனிதநேயத்தையும் பார்த்து மெய்சிலிர்த்துப் போன ஆட்டோ டிரைவர், அவனிடம் பணம் வாங்க மறுத்து மனதாரப் பாராட்டியுள்ளார். இந்தச் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், “இந்தக் காலத்திலும் இப்படியொரு தங்கமான பிள்ளையா!” என்று ஒட்டுமொத்த நெட்டிசன்களும் அந்தச் சிறுவனுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.