தமிழக சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பதிலுரை வழங்கினார். அதன்பிறகு அந்த துறைகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதன்படி உயர்கல்வி பயிலும் ஆயிரம் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா 14,000 ரூபாய் மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஒரு கால் மட்டும் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் விதமாக இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு 500 பயனாளிகளுக்கு வழங்கப்படும். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு சார்பாக வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகையானது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டு 22,300 மாணவர்கள் பயன்பெறும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.