மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா தொகுதியைச் சேர்ந்த சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கைக்வாட், மும்பையில் உள்ள எம்எல்ஏ கேண்டீனில் உணவுப் பொருளின் தரம் குறித்து கோபம் கொண்டுத், அங்கு பணிபுரியும் ஊழியரை தூக்கி எறிந்து அடிக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது. ‘தோசை சாப்பிடும்போது வாந்தி வந்தது, பருப்பு கெட்டுப் போனது’ என்பதைக் காரணமாகக் கூறிய இவர், அளித்த பேட்டியில், “நான் செய்ததிலே எந்த வருத்தமும் இல்ல. நான் ஒரு எம்எல்ஏ மட்டும் இல்ல, போராளியும்தான்” என கூறியுள்ளார்.

சஞ்சய் கைக்வாட் மேலும் கூறியதாவது: “நான் கேண்டீனில் பருப்பு, சாதம், 2 சப்பாத்தி கேட்டேன். சாப்பிட ஆரம்பித்ததும் வாந்தி வந்துச்சு. உடனே கேண்டீனுக்குப் போய் பார்த்தபோது உணவின் வாசனை மோசமாக இருந்தது . மேலாளர் கூட ‘இது சாப்பிடவே முடியாது. எப்போதுமே பழைய உணவுதான் கொடுக்கிறாங்க. சிக்கன், முட்டை எல்லாமே நாள் கடந்து பழுதாகிவிடும். நான் இதற்காக ஏற்கனவே நான்கு முறை புகார் செய்திருக்கிறேன். என் பொறுமை தாண்டிச்சு. நான் ஜூடோ, கராத்தே, குத்துச்சண்டை, வாள், கம்பு என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டவன். எதுவும் செய்யக்கூடியவன் நான்” எனக் கூறினார்.

 

இதுபோன்ற வன்முறை நடத்தை மக்களுக்கு தவறான சைகையை ஏற்படுத்தும் என கேட்ட செய்தியாளருக்கு பதிலளித்த எம்எல்ஏ, “நீங்க இந்த நிலைக்கு வர காரணம் நிர்வாகமே. புகார் செய்யும் போதும் கேட்க மாட்டாங்க. மக்கள் என்ன செய்வாங்க? அவங்க கையாலதான் தீர்வு காண்பாங்க. நான் காந்தியவாதி கிடையாது. என் செயலில் எந்த தவறும் இல்லை. சட்டசபையில் இந்த விவகாரம் குறித்து பேசப்போறேன். இன்னும் பலர் பாதிக்கப்படுறாங்க” என சஞ்சய் கைக்வாட் துணிவுடன் தெரிவித்தார். மேலும் இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது