அமெரிக்காவின் தென் கிழக்கில் அட்லாண்டாவை தலைநகரமாகக் கொண்ட மாநிலம் ஜியார்ஜியா. இந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி இந்து மதத்திற்கு எதிரான செயல்களையும் விரோத சிந்தனைகளையும் கண்டிக்கும் விதமாகவும் இந்துஃபோபியா என்ற இந்து மதம் குறித்து பரப்பப்படும் பொய்யான அச்சுறுத்தலுக்கு எதிராக தீர்மானம் ஒன்று கொண்டு வந்தனர். இந்து மதத்திற்கு ஆதரவான கண்டனம் எழுப்பப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த தீர்மானம் கொண்டு வந்த போது ஆயுர்வேதம், யோகா, தியானம், இந்து மத உணவு முறை, கலை, கர்நாடக இசை உள்ளிட்ட பல வழிகளில் அமெரிக்கர்களின் வாழ்க்கை முறையையும் கலாச்சாரத்தையும் மேம்படுத்திய இந்து மதத்தின் பங்களிப்புக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜியார்ஜியா ஆளுநர் பிரைன் போர்டர் கேம்ப் பிரகடனம் ஒன்றை சில தினங்களுக்கு முன்பு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஜியார்ஜியாவில் உள்ள அமெரிக்க வாழ் இந்து சமூகத்தினர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிகம் உதவியுள்ளனர் அவர்களால் இங்கு உள்ள குடிமக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் இந்து பாரம்பரிய மாதமாக அக்டோபர் மாதம் கொண்டாடப்படும். இந்து மத ஆன்மீகம் கலாச்சாரம் போன்றவற்றை கவனிக்கும் வகையில் இந்த மாதத்தில் கொண்டாட்டங்கள் அமையும்” என பிரைன் போர்டர் கேம்ப் தெரிவித்துள்ளார்.