தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு தோல்வியைத் தவிர்த்து, 2026-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இந்திய அணியின் ஆதிக்கம் அசைக்க முடியாததாக இருந்தது. குறிப்பாக, இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றி இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் அடிக்கும் மூன்றாவது தொடர்ச்சியான அரைசதம் இதுவாகும். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஜஸ்பிரித் பும்ராவின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 159 ரன்களுக்குச் சுருண்டது. பும்ரா 4 ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Shahid Afridi said:
“India deserved to win. 🇮🇳🏆 The Indian team played like true champions throughout the entire tournament.” 👏🔥#INDvsNZ pic.twitter.com/Hszi3wMiig— Khan (@ccricket713) March 9, 2026
இந்தியாவின் இந்த வரலாற்று வெற்றியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். அதன்படி ஷாகித் அப்ரிடி: “இந்தியா இந்த மகுடத்திற்கு முற்றிலும் தகுதியானது. அவர்களின் பலமே பலமான பெஞ்ச் (மாற்று வீரர்கள்) பலம்தான். பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்களும் ஆடும் லெவனில் இருக்கும் வீரர்களுக்கு இணையாகத் திறமை படைத்தவர்களாக உள்ளனர். சஞ்சு சாம்சன் தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி, நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி அணியை உயர்த்தினார்.
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகியோரின் பங்களிப்பும் அபாரமானது. ஜஸ்பிரித் பும்ரா இந்திய பந்துவீச்சின் முதுகெலும்பாகத் திகழ்கிறார். புதிய பந்து, பழைய பந்து, ஸ்லோயர் என அனைத்திலும் அவர் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். “இந்தியா வெற்றி பெற்றது எனக்கு ஆச்சரியமாகத் தெரியவில்லை. ஒரு அணி தொடர்ந்து பெரிய தொடர்களின் இறுதிப் போட்டிக்குச் செல்லும்போது, அவர்களுக்கு வெற்றியை எப்படிக் கையாள வேண்டும் என்பது பழகிவிடும்.
இந்திய அணியின் இந்த வெற்றிக்குக் காரணம் அணியில் உள்ள ஸ்திரத்தன்மையும், வீரர்களுக்கு வழங்கப்படும் தொடர் வாய்ப்புகளுமே ஆகும். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அடிக்கடி நிகழும் மாற்றங்களும், பொறுமையின்மையுமே பின்னடைவுக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
