பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர், இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

இந்த திடீர் தாக்குதல், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றத்தை அதிகரித்தது. தொடர்ந்து எல்லையில் அத்துமீற முயன்ற பாகிஸ்தான் தாக்குதல்களையும், இந்திய ராணுவம் வீரத்துடன் முறியடித்து, நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த சூழ்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பங்கேற்று வீரத்துடன் செயல்பட்ட 9 விமானப்படை அதிகாரிகளுக்கு, நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த போர்க்கால வீரப்பதக்கமாகக் கருதப்படும் ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் — ஸ்பார்டன் லீடர்கள் சார்தக் குமார், சித்தார்த் சிங், ரிஸ்வான் மாலிக், விங் கமாண்டர் ஜாய் சந்திரா, பிளைட் லெப்டினண்ட் ஆர்ஷ்வீர் சிங் தாக்கூர், குரூப் கேப்டன்கள் ரஞ்சித் சிங் சித்து, மனிஷ் அரோரா, அனிமேஷ் பத்னி மற்றும் குணால் கல்ரா ஆகியோர் ஆவர்.

இந்த அறிவிப்பு வெளிவந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பெருமிதம் நிலவுகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக உயிரை பணயம் வைத்து செயல்பட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது, அவர்களின் தியாகத்தையும் தைரியத்தையும் போற்றுவதாகும். “வீர சக்ரா” விருது, பாரதத்தில் “பராம் வீர் சக்ரா” மற்றும் “மஹா வீர சக்ரா”க்கு அடுத்த மிகப்பெரிய போர்க்கால கௌரவமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.