
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சரவை குழு (CCS) கூட்டம் மிக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, SAARC Visa Exemption Scheme (SVES) அடிப்படையில் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தற்போது இந்தியாவில் உள்ள SVES விசாவுடன் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவால், இந்தியாவில் சட்டபூர்வமாக உள்ள பாகிஸ்தானியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், விசா இல்லாமல் உள்ளவர்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனை தொடர்ந்து பலரும் சீமா ஹைதர் நிலை குறித்து சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். சீமாஹைதர் என்ற பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த பெண் கடந்த 2023 மே 13-ம் தேதி நேபாளம் வழியாக இந்தியா வந்தார். PUBG கேமில் அறிமுகமான இந்திய இளைஞர் சச்சின் மீனாவை காதலித்து திருமணம் செய்து, தற்போது நொய்டாவில் குடும்பமாக வசிக்கிறார். இவர்களுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
சீமாஹைதர் தற்போது இந்திய குடியுரிமை பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதம், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் தயவு மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். அதில், “என் நலனுக்காகவும், பிள்ளைகள் மற்றும் கணவருடன் ஒரு புதிய வாழ்க்கையை அமைக்க நீங்கள் எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்,” என கேட்டுள்ளார்.
ஆனாலும், சட்டப்படி இந்தியக் குடியுரிமையை பெற்றுக்கொள்ளும் நிபந்தனைகள் கடுமையாக இருப்பதால், தற்போது அவரது இருப்பு சட்டபூர்வமல்ல என்பது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக விசா ரத்து செய்ததற்கேற்ப, சீமா ஹைதர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லையா என்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த
தகவலும் தெரிவிக்கவில்லை.