சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனை, கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘கிளிஃப் ஹவுஸ்’-ல் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தியாவின் பெருமையாகவும், கேரளாவின் சொந்தப் பிள்ளையாகவும் விளங்கும் சஞ்சு சாம்சனை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக முதல்வர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், கேரள மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் அவருக்குத் தெரிவித்த முதல்வர், சஞ்சு சாம்சன் தனது சமீபத்திய சாதனைகளில் இருந்து உத்வேகம் பெற்று, வரும் காலங்களில் இன்னும் பல புதிய உயரங்களை எட்டிப் பிடிக்க வேண்டும் என மனதார வாழ்த்தியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.