
எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை நிலை நிறுத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்றுமதி தடையால் அரிசியின் விலை உலக அளவில் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அரிசி வர்த்தகர்கள் இதன் மூலம் அதிக லாபம் பெறுவார்கள் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கூறுகையில் “இந்தியாவின் இந்த தடை உத்தரவால் உலகம் முழுவதிலும் உணவு பண்டங்களின் விலை அதிகரிக்கும். இது சில நாடுகளில் எதிர்வினை நடவடிக்கைகளையும் எடுக்கச் செய்யும். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்திய நாட்டின் பொருளாதாரம் குறைந்திருந்தாலும் ஒரு திடமான வளர்ச்சி இருக்கிறது. எனவே இந்த அரிசி ஏற்றுமதி தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று கோருகிறோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச நாளைய நிதியத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் கூறுகையில், “பல நாடுகளில் பணவீக்கம் குறைந்து வரும் சூழல் நிலவுகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இது போன்று கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கான காரணங்களை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இதுபோன்ற தடை உத்தரவுகளின் தாக்கம் உலக அளவில் விலைவாசியை அதிகரிக்கச் செய்யும் தவிர குறைக்காது. படிப்படியாக தடை உத்தரவை இந்தியா நீக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.