
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் பற்றி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கூறி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பெரியார் பாலியல் இச்சை வரும் போதெல்லாம் தாய் மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுங்கள் என்று கூறியதாக சீமான் கூறினார். அதோடு பெரியாருக்கும் சமூக நீதிக்கும், பெண்ணுரிமைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
பெரியார் தாலியை அறுத்து எறியுங்கள் பெண்களுக்கு அது தடையாக இருக்கிறது என்று கூறியதால் பொதுமேடையில் வைத்தே திராவிடர்கள் அதை செய்தனர். இதேபோன்று பெண்கள் என்ன குழந்தையை பெற்றெடுக்கும் இயந்திரமா? கர்ப்பப்பையையும் அறுத்து எறிய வேண்டியதுதானே என்று பெரியார் சொன்னதால் அதையும் செய்ய வேண்டியது தானே என்று சீமான் கூறினார்.
அதோடு இது பெரியார் மண் கிடையாது என்றும் அவரே ஒரு மண்ணுதான் என்றும் கூறினார். இப்படி தொடர்ந்து பெரியார் பற்றி சீமான் அவதூறாக பேசி வரும் நிலையில் அவருக்கு திமுகவினர் மற்றும் பெரியார் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் சீமான் தொடர்ந்து பெரியாரைப் பற்றி விமர்சிப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் சீமானாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி பெரியாரைத் தொடர்ந்து சிறுமைப்படுத்தி பேசினால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். மேலும் பெரியாரைத் தொடர்ந்து விமர்சித்தால் அவர்கள் தமிழக அரசியலில் இருந்து விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.