தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள தாராசுரத்தில் நேற்று பாமக சார்பாக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்த மாநாடு வெறும் ட்ரெய்லர் மட்டும்தான். மெயின் பிக்சர் அடுத்த மாநாட்டில் நடைபெற உள்ளது. பாமகவின் அடுத்த மாநாடு மே 11ஆம் தேதி மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு மாநாடாக நடைபெற உள்ளது. இந்த சோழமண்டலத்தில் அதிகமாக இருப்பவர்கள் விவசாயிகள் தான். இந்த விவசாய பெருங்குடி மக்களிடம் நான் சில கேள்விகளை கேட்க வேண்டும். இன்று விவசாயிகளுக்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு பாதுகாவலர் நம்முடைய ஐயா ராமதாஸ் மட்டும் தான்.

விவசாயிகளுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் குரல் கொடுத்து போராடுபவர் அவர்தான். ஆனால் நீங்கள் ஏன் எங்களுக்கு வாக்களிக்க மறுக்கிறீர்கள்? இன்னும் உங்களுக்கு நாங்கள் என்னதான் செய்ய வேண்டும்? மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் என எந்த பிரச்சனை என்றாலும் போராளியாக வந்து நிற்பவர் மருத்துவர் ராமதாஸ் அய்யாதான். இன்று டெல்டாவையே அழித்திருப்பார்கள். பல கட்ட போராட்டங்களை நடத்தி திட்டங்களை ரத்து செய்ய வைத்து டெல்டாவை காப்பாற்றியவர் ராமதாஸ் அய்யா தான். எங்களுடைய உரிமையை தான் நாங்கள் கேட்கின்றோம். நாங்கள் அனைவரும் தொடர்ந்து இந்த சமுதாயத்திற்காக போராடி வருகின்றோம். இதனை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்