அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி உள்ளது கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே கூட்டணிக்குள் இருந்தாலும் அதிமுக மற்றும் பாஜக இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் வருகிறது. கொங்கு மண்டலத்தில் கோலோச்சுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.

அதனை மேலும் வலுப்படுத்தக் கூடிய வகையில் சமீப காலமாக பாஜக முக்கிய நிர்வாகிகள் பலரும் தங்களின் பதவியை ராஜினாமா செய்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். அதிமுக மற்றும் பாஜக இடையே பிரச்சனை மேலும் வலுவடைந்துள்ளது. இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக அண்ணாமலை பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை அமர்ந்த கரையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக மாநில பாஜக நிர்வாகிகள் மற்றும் மாநில தலைவர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். கூட்டணியின் நிலைப்பாட்டை எடுத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன்.

பிரதமர் மோடியை சந்திப்பதற்கு நேரம் கேட்டு உள்ளேன். கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வருகின்ற மே மாதம் பத்தாம் தேதி வரை கட்சிப் பணிகளில் தீவிரமாக இருப்பேன். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்று கட்சி தலைமை முடிவு செய்தால் எனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என அவர் பேசி உள்ளது கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.