தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு மார்ச் 21-ம் தேதியும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதாம்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். மேலும் இன்று (மார்ச் 18) ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.