ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், திரைக்கு வருவதற்கு முன்பே உலக அளவில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள 80 ஆயிரம் இருக்கைகள் கொண்ட புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழா, இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய மக்கள் கூட்டத்தைச் சாட்சியாக்கி மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் (Malaysian Book of Records) இடம் பெற்றுள்ளது. மலேசிய வரலாற்றிலேயே இவ்வளவு அதிகமான ரசிகர்கள் பங்கேற்ற ஒரு திரைப்பட இசை வெளியீட்டு விழா இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படக் கலைஞர்கள், முக்கியப் பிரபலங்கள் எனப் பலரும் திரண்டிருந்த இந்த விழாவில், சாதனைக்கான சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது. வரும் ஜனவரி 9-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த உலக சாதனை அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவைத் தாண்டி ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது சமூக வலைதளங்களில் ‘வரலாற்றுச் சாதனை’ என வைரலாகி வருகிறது.
