மத்திய அரசால் நடத்தப்படும் நீட் (NEET) நுழைவுத் தேர்வு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அவர்கள் மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நீட் தேர்வு என்பது ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டும் எதிரானது கிடையாது; அது ஒட்டுமொத்த இந்தியாவுக்கே எதிரானது. இந்தத் தேர்வு முறை ஏழை, எளிய மாணவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மக்களுக்கே எதிரானது” என்று மிக ஆக்ரோஷமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை என்பது எப்போதுமே 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில்தான் நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போதுள்ள நீட் தேர்வு முறையானது, பள்ளி மாணவர்கள் படிக்கும் 11 மற்றும் 12-ஆம் வகுப்புப் பாடத்திட்டங்களுக்கு (Syllabus) எந்தவொரு முக்கியத்துவத்தையும், மதிப்பையும் அளிக்கவில்லை என்று சாடியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திருமாவளவன் விடுத்துள்ள இந்த அதிரடி அறிக்கை தற்போது சமூக வலைதளங்களில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
