திருச்சியில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சுக்கு, பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். முதலமைச்சர் என்பவர் சினிமாவில் நடிப்பது போல நரம்பு புடைக்கப் பேசுகிறார் என்றும், தமிழ்நாட்டில் என்ன சினிமா கட்சி வசனமா நடக்கிறது? நரம்பு புடைக்க வேண்டிய அவசியம் இங்கே யாருக்கும் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “என் வாயில் வந்துவிடும்” என்று முதலமைச்சர் கூறுகிறார். ஒரு நடிகராக இருந்து கொண்டு எந்த வசனமும் பேசலாம், ஆனால் ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு அப்படிப் பேசினால் வாயில் என்ன வரும்? இது ஒரு முதலமைச்சர் பேசக்கூடிய மெச்சூரிட்டியான பேச்சா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மற்ற கட்சிகளை எல்லாம் ‘அள்ளு சில்லு’ என்று முதலமைச்சர் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அவர் எந்தவிதமான போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ பண்ணி, ஜெயிலுக்குப் போய் இந்த இடத்திற்கு வரவில்லை; நேரடியாகக் கோட்டையிலிருந்து வந்ததால் அடிப்படை என்னவென்றே தெரியாமல் பேசுகிறார் என்றும் நயினார் நாகேந்திரன் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
