உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த ஷிகா காஷ்யப் என்ற இளம்பெண், தற்போது சமூக வலைதளங்களில் ‘கான்பூர் சமோசா கேர்ள்’ என்று மிகவும் பிரபலமாகி வருகிறார். பொதுவாக எண்ணெய்ச் சட்டியில் ஒரு துளி தண்ணீர் பட்டாலே நாம் பயந்து ஓடுவோம், ஆனால் ஷிகா கொதிக்கும் எண்ணெய்க்குள் தனது வெறும் கையை விட்டு பஜ்ஜி சமோசா போன்றவற்றை லாவகமாக வெளியே எடுக்கிறார். இதைப் பார்க்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். அங்கிருந்த ஒருவர் அந்தப் பஜ்ஜி தொட்டுப் பார்த்தபோது சூடு தாங்காமல் கையை எடுத்தார், இதன் மூலம் அந்த எண்ணெய் எவ்வளவு கொதிநிலையில் இருந்தது என்பது உறுதியானது.

​ஷிகாவின் தந்தை கடந்த 35 ஆண்டுகளாக இந்தச் சிறு கடையை நடத்தி வருகிறார். வீட்டில் சும்மா இருக்க விரும்பாத ஷிகா, தனது தந்தையின் தொழிலுக்கு உதவியாக இருக்க முடிவெடுத்தார். இந்த நிலையில், கொதிக்கும் எண்ணெயில் கை வைக்கும் இவரது இந்த விசித்திரமான திறமை வைரலாகி, இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் இவரைப் பின்தொடர்கின்றனர். இவரது கை பக்குவத்தையும், இந்த அதிசயத்தையும் நேரில் காண கான்பூர் மக்கள் இவருடைய கடையில் அலைமோதி வருகின்றனர்.