தாலிபான் தொடர்புடைய சமூக ஊடகங்களில், அமெரிக்கர்களை ஆப்கானிஸ்தான் வந்துபார்க்க அழைக்கும் ஒரு விசித்திரமான விளம்பர வீடியோ தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், முதலில் மூன்று முகக்கவசம் அணிந்த நபர்களின் பின்னால் ஆயுதம் ஏந்திய ஐந்து ஆப்கான் வீரர்கள் காட்சி தருகின்றனர். திடீரென, ஒருவரின் முகக்கவசம் அகற்றப்பட, ஒரு வெள்ளை அமெரிக்கர் சிரித்தபடியே “Welcome to Afghanistan!” என கூறுகிறார். இதை தொடர்ந்து, ஒரு இளைஞர் பழைய டாங்க் மீது புல் அப்புகள் செய்து காணப்படுகிறார்; மற்றொருவர் ஏரியில் துப்பாக்கியுடன் நீந்துகிறார். பின்னணியில், “இந்த ரைபிள் safety-யில கூட இல்ல!” என நகைச்சுவை பேச்சும் இடம்பெற்றது.

இந்த வீடியோவில், மேற்கத்திய சுற்றுலா பயணிகள், பாரம்பரிய ஆப்கான் உடைகள் அணிந்து, அங்குள்ள உணவுகளை ருசித்து மகிழும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவைப் பார்த்த சமூக வலைதள பயனர்கள் இருவகை பார்வையை வெளிப்படுத்தியுள்ளனர். சிலர், “இது ஒரு உண்மையைச் சொல்கிறது” என பாராட்டினர்; மற்றவர்கள், “இது தாலிபானின் இரட்டை முகத்தை காட்டுகிறது. வெளிநாட்டு பெண்களுக்கு அனுமதி, ஆனால் உள்ளூர் பெண்களுக்கு இல்லை” என கண்டித்துள்ளனர். உண்மையில், இந்த வீடியோ பரவிய பின்னர், பிரபல அமெரிக்க நடிகை விட்னி ரைட் ஆப்கானில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் ரைபிள் பிடித்த காட்சிகள் வைரலானது.

இந்த வீடியோ வெளியான பின்னும், அமெரிக்கா மற்றும் யுகே அரசு, ஆப்கானிஸ்தான் செல்லக் கூடாது என Level 4 travel advisoryயை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டில் பயங்கரவாதம், கடத்தல் மற்றும் குடிமை கலவரங்கள் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2021-இல் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டதால், அங்கு அமெரிக்கர்களுக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்காது. எனவே, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இவ்வாறான விளம்பர வீடியோக்களில் மயங்கி செல்லாமல், நிலையான தகவல்களை பார்த்து தான் முடிவெடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் எச்சரிக்கை ஆகும்.