அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் நாங்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகுவோம் என்று தெரிவித்தார். அதன்பிறகு பேசிய மனோஜ் பாண்டியன் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதே தவிர தீர்மானங்கள் செல்லும் என்றும் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும் தீர்ப்பில் வழங்கவில்லை என கூறினார்.

இதைத்தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, நாங்கள் மக்களை நாடி செல்ல போகிறோம். கட்சியில் உள்ள தொண்டர்கள் தான் வாக்களித்து தலைமையை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் நிலைமை தற்போது இப்படி இருக்கிறது என்றார். அதன் பிறகு செய்தியாளர்கள், நீங்கள் அம்மா முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கப் போவதாக செய்திகள் வெளியானது என்று கேட்டனர். அதற்கு பைத்தியக்காரர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அரசியல்வாதிகள் அப்படி சொல்ல மாட்டார்கள் என்று முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறினார்.

இந்நிலையில் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் 50 வருடங்களாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கட்டி காத்த கட்சி. இவர்கள் கொண்டு வந்த சட்ட விதியை காப்பாற்றுவதற்காக தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இது ஓபிஎஸ் தாத்தா மாடசாமி ஆரம்பித்த கட்சி அல்ல. பழனிச்சாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல. இது தொண்டர்களுக்காக எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி. நாங்கள் இதற்காகத்தான் தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்னடைவு கிடையாது. கிறுக்கன் சொன்னான் அதை போய் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே.

எடப்பாடியின் அணி தான் ஏ ஆணவத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். அவர்களை அடக்கும் சக்தி எங்களிடம் உள்ளது என்றார். மேலும் சசிகலாவை சந்திப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, கூடிய சீக்கிரமே அது நடக்கும் என்று கூறினார். அதன் பிறகு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு முக்கிய கூட்டம் கூட்டப்படும் அதில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.