கடந்த இரண்டு ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்திற்காக மத்திய அரசு வழங்கிய சுமார் ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது  என்பதை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என பாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளும் சிறப்பான கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம் செயல்படுகிறது. இந்த திட்டத்திற்கு 2021 – 2022-ம் ஆண்டில் ரூபாய் 1598 கோடியும் 2022 – 2023 ஆம் நிதி ஆண்டில் ரூ.1,421 கோடியையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக பள்ளிகளில் மழலையர் வகுப்புக்கான நிதி கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படவில்லை என தனியார் பள்ளி சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் வரும் நிதியாண்டில் மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அதன் காரணமாக இந்த திட்டத்திற்காக இரண்டு ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி என்னானது என்பதை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிக்க வேண்டும். மேலும் ஏழை, எளிய மக்கள் கல்வி பெறுவதை தடுக்க முயற்சி செய்யாமல் உடனடியாக கல்வி கட்டண நிலுவைத் தொகையை பள்ளிகளுக்கு வழங்கி நடப்பாண்டில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் தமிழகத்தில் பாழடைந்த பள்ளி கட்டிடங்களின் தற்போதைய நிலை என்ன என்பதையும் அவர் விளக்க வேண்டும் என கூறியுள்ளார்.